முதல்-அமைச்சர் வருகையையொட்டி குமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

தமிழகத்தில் தீவிரமாக நடந்து வரும் கொரோனா தடுப்பு பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்டம் வாரியாக சென்று ஆய்வு செய்து வருகிறார். அதன்படி அவர் குமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாளை மறுநாள் (14/10/2020) ஆய்வு செய்ய உள்ளார். அதன்பிறகு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதற்காக அவர் நாளை இரவு குமரிக்கு வருகிறார்.

முதல்-அமைச்சர் வருகையையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் முதல்-அமைச்சர் ஆய்வு நடத்த உள்ள கலெக்டர் அலுவலகம், அவர் தங்கும் அரசு விருந்தினர் மாளிகை, முதல்-அமைச்சர் செல்லும் வழித்தடங்கள் அனைத்தும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் அரசு விருந்தினர் மாளிகையை நேற்று போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன் பின்னர் அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் வருகையையொட்டி குமரி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தினமும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. விழா நடைபெறும் கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போட திட்டமிடப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1,300 போலீசார் ஈடுபடுவார்கள். நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் அரசு அதிகாரிகள் உள்பட அனைவரும் விழா அனுமதிக்கான அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

முதல்-அமைச்சர் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்வது கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து இன்று அரசு அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது.