அமீரகத்தில் வெப்பநிலை குறைந்ததால் அபுதாபி, துபாய் உள்பட பல இடங்களில் கடும் பனிமூட்டம்

அமீரகத்தில் சமீப நாட்களாக குளிர்காலம் தொடங்கியுள்ளதால் வெப்பநிலை வெகுவாக குறைந்துள்ளது. பகல் நேரத்தில் கடந்த மாதத்தை விட வெப்பநிலை வெகுவாக குறைந்து வருகிறது. காற்றில் உள்ள ஈரப்பதத்தின் அளவும் குறைந்துள்ளது. பொதுவாக வெப்பநிலை அதிகபட்சமாக பகல் நேரங்களில் 30 டிகிரி செல்சியசுக்கும் குறைவாகவே காணப்பட்டது. இதனையடுத்து நேற்று காலை நேரத்தில் அபுதாபி மற்றும் துபாய் பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் ஏற்பட்டது.

இதன் காரணமாக துபாயின் வானுயர்ந்த பல கட்டிடங்கள் பனிமூட்டத்தில் மறைந்தது போல் காணப்பட்டது. இந்த பனிமூட்டம் காலை 9 மணி வரை நீடித்தது. அபுதாபியில் அல் அஜ்பான் மற்றும் மதினத் ஜாயித் ஆகிய இடங்களில் கடும் பனிமூட்டம் ஏற்பட்டது. துபாயில் ஷேக் ஜாயித் சாலை, இ-311 ஷேக் முகம்மது பின் ஜாயித் சாலை, எமிரேட்ஸ் சாலை மற்றும் இ-66 துபாய் அல் அய்ன் சாலை ஆகிய பகுதிகளில் பனிமூட்டம் அடர்த்தியாக வெகு நேரம் காணப்பட்டது.

துபாய் போலீசார் சாலையில் செல்லும் வாகனங்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பை சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். அதேபோல் பல்வேறு சாலைகளில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு கடும் பனிமூட்டம் தென்பட்டது. இதனால் வாகனங்கள் சாலைகளில் வேகமாக செல்ல முடியாமல் திணறின. பல்வேறு சாலைகளில் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்கள் சென்ற காட்சியை காணமுடிந்தது.

பனிமூட்டம் காரணமாக சாலையில் முன்புறமாக 1 கி.மீ. தொலைவுக்கு பார்வைதிறன் குறையும் என அமீரக தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குறிப்பாக துபாய்-அபுதாபி செல்லும் வாகனங்கள் மிக கவனமாக செல்ல வேண்டும். முன்னால் செல்லும் வாகனங்களை கவனித்து தகுந்த இடைவெளியுடன் தங்கள் வாகனங்களை ஓட்டி செல்ல வேண்டும். இன்று துபாயில் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால் சாலைகளை பயன்படுத்துவோர் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என கூறியுள்ளது.