பிடி... பிடி... பயணிகள் பேருந்தில் பிச்சுக்கிட்டு போன பின்சக்கரம்

சென்னை: சென்னை அடுத்த ஊரப்பாக்கத்தில் 50 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் பின் பக்க சக்கரங்கள் கழண்டு பல மீட்டர் தூரம் சாலையில் ஓடியதால் பேருந்து குடை சாய்ந்தது.

சென்னை கோயம்பேட்டில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூருக்கு அரசு பேருந்து ஒன்று 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. ஊரப்பாக்கத்தில் உள்ள சங்கரவித்யாலயா பள்ளி அருகில் வந்த போது அந்த பேருந்தின் பின் பக்கத்தில் உள்ள இரு சக்கரங்கள் துண்டாக உடைந்து ஜோடியாக சாலையில் ஓடியது. இதனால் அந்த பேருந்து குடை சாய்ந்தது.

பேருந்தில் இருந்து கழண்டு பல மீட்டர் தூரம் வேகமாக ஓடிய சக்கரங்கள் அதிர்ஷ்டவசமாக எந்த ஒரு வாகன ஓட்டி மீதும் மோதாமல் சாலையோரம் ஒதுங்கி நின்றது. அதே நேரத்தில் பேருந்து நடு சாலையில் குடை சாய்ந்ததால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் பேருந்தை ஓரமாக இழுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்தனர். பின்னர் போக்குவரத்தை சீர் செய்தனர்.