பள்ளிகளுக்கு விடுமுறையா? .. அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

சென்னை: தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 13-ம் தேதி தொடங்கியது. முதல் நாளன்று மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெற்ற நிலையில், மொழித் தேர்வை 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து தேர்வு எழுத வராத மாணவர்கள் குறித்து விசாரிக்கப் பள்ளிகளுக்கு அறிவுறுத்தபட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று கல்வித்துறை அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இதில் 50 ஆயிரம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதாதது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது: தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடும் அளவிற்கு எந்த சூழலும் ஏற்படவில்லை. எனினும், மருத்துவத்துறையின் ஆலோசனைப்படி செயல்படுவோம்.

இதையடுத்து 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் முன்னதாகவே நடத்த இதுவரை எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை எனவும், திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும். 12-ஆம் வகுப்பு மொழித் தேர்வுகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கவில்லை என வெளியான தகவல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கிருஷ்ணகிரி, தருமபுரி, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மாணவர்களின் இடைநிற்றல் அதிகமாகியுள்ளது என அவர் கூறினார்.