மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி தனக்கு செய்த துரோகத்தை வெளிப்படுத்திய கணவன்

மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி அவரது துரோகத்தை கணவர் நிரூபித்துள்ளார். இந்த சம்பவம் எந்த நாட்டில் நடந்தது என்பது தெளிவாக தெரியவில்லை என்றாலும், சமூக ஊடகம் ஒன்றில் வெளியான அந்த வீடியோ வைரலாகியுள்ளது. வீடியோ ஸ்பானிஷ் மொழியில் உள்ளது. அந்த வீடியோவில் வளைகாப்பு நிகழ்ச்சி தொடங்குகிறது. கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண் அழகான பிங்க் நிற உடையில் முன் தள்ளிய வயிற்றுடன் அமர்ந்திருக்கிறார்.

விருந்தினர்கள் அமர்ந்திருக்க, கையில் மைக்குடன் கணவன் எழ, மக்கள் கரவொலி எழுப்பி அவரை உற்சாகப்படுத்துகிறார்கள். புன்னகையுடன் எழும் அவர், தன் அருகில் அமர்ந்திருக்கும் ஒருவரைக் காட்டி இது எனது வக்கீல். எங்களிடம் ஒரு ஆவணம் உள்ளது அதை உங்களுக்கு காட்ட விரும்புகிறோம். உங்களுக்கெல்லாம் நான் அப்பாவாகப்போகிறேன் என்பது தெரியும். ஆனால், உங்களுக்குத் தெரியாத ஒரு விஷயம் இருக்கிறது. அது என்னவென்றால் என் மனைவி நான்கு மாத கர்ப்பம் என்றுதானே நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால், அது உண்மையில்லை. அவர் ஆறு மாத கர்ப்பமாக இருக்கிறார்.

அவள் கர்ப்பமுற்றதை உறுதி செய்யும் பரிசோதனையின் முடிவு என கணவர் அந்த ஆவணத்தைக் காட்ட அவரது மனைவியின் முகம் மாறுகிறது. கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட, அவரது மனைவி இங்கே வேண்டாம் நாம் தனியாக இதைக் குறித்து பேசிக்கொள்ளலாம் என கணவரிடம் கெஞ்சுகிறார். மனைவி கெஞ்சுவதை பெரிது படுத்தாமல், அதற்குள் அவரது வக்கீல் லேப்டாப்பை திறந்து, அதிலுள்ள ஒரு வீடியோவை விருந்தினர்களுக்குக் காட்டுகிறார். அதில் வெறும் டவல் மட்டும் அணிந்த நிலையில் அந்த பெண்ணும் வேறொரு ஆணும் கட்டியணைக்கும் காட்சி ஒன்று ஓடுகிறது.

அந்த பெண்ணுடன் இருக்கும் ஆணும் அந்த நிகழ்ச்சியிலேயே இருக்க, அவரை கையைப் பற்றி அழைத்துவரும் அந்த கணவர், இந்த வளைகாப்பு நிகழ்ச்சி என்னுடையதல்ல இவர்கள் இருவருடையதும், நான் விடைபெற்றுக்கொள்கிறேன் என அங்கிருந்து மெல்ல செல்கிறார். பின்னர் பெண்ணின் ரகசிய காதலனுக்கு அடி விழ ஆரம்பிக்கிறது. கணவர் அங்கிருந்து புறப்பட, அவருக்கு துரோகம் செய்த அந்த மனைவி ஏதோ கெஞ்சியபடியே பின்னே ஓடுகிறார்.