சென்னை அணிக்கு 134 ரன்கள் இலக்கு வைத்த ஹைதராபாத் அணி

சென்னை: 134 ரன்கள் இலக்கு... சென்னை அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 7 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் குவித்துள்ளது.

சென்னை மற்றும் சன் ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இதனையடுத்து, ஹைதாராபாத் முதலில் பேட் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹாரி ப்ரூக் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர். இந்த இணை நிதான தொடக்கத்தைத் தந்தது. இருப்பினும், ஹாரி ப்ரூக் 18 ரன்களிலிலும், அபிஷேக் சர்மா 34 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அதன் பிறகு களம் கண்டவர்களும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.

ராகுல் திரிபாதி (21 ரன்கள்), மார்கரம் (12 ரன்கள்), மயங்க் அகர்வால் (2 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழல் பந்துவீச்சில் அந்த அணி தடுமாறியது. 95 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 7 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் குவித்தது. சென்னை அணியின் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா 4 ஓவர்களுக்கு வெறும் 22 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆகாஷ் சிங், மகிஷ் தீக்‌ஷனா மற்றும் மதீசா பதிரானா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

இதனையடுத்து, 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்கி உள்ளது.