மகாராஷ்டிராவில் 2-வது கொரோனா அலையை நான் விரும்பவில்லை - உத்தவ் தாக்கரே

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நாட்டிலே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதேபோல் அங்கு கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கையும் 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

இந்நிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே டாக்டர்கள் குழுவினருடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசியபோது, ஊரடங்கை முழுமையாக தளர்த்த அவசரம் காட்ட விரும்பவில்லை. கொரோனாவில் இருந்து எப்போதும் விடுபடுவோம் என்பதைவிட ஊரடங்கை எப்படி தளர்த்துகிறோம் என்பது முக்கியம் என்று கூறினார்.

இதுகுறித்து உத்தவ் தாக்கரே பேசுகையில், கொரோனாவில் இருந்து எப்போதும் விடுபடுவோம் என்பதைவிட ஊரடங்கை எப்படி தளர்த்துகிறோம் என்பது முக்கியம். ஊரடங்கை அவசரமாக தளர்த்தியவர்கள் எல்லோரும் மீண்டும் ஊரடங்கை பிறப்பித்து உள்ளனர். மாநிலத்தில் 2-வது கொரோனா அலையை நான் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், மாநில அரசின் ‘மிஷன் பிகன் அகெயன்' திட்டம் மூலம் ஊரடங்கு படிப்படியாக தளர்வு செய்யப்பட்டு வருகின்றன. வைரசின் அச்சுறுத்தல் உள்ள வரை ‘சேஸ் தி வைரஸ்' பிரசாரம் முடியாது. மாநிலத்தில் தற்போது மழைக்காலம். மழைக்கால நோய்களுக்கும் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறினார்.