மன உளைச்சலை நான் உணர்கிறேன்... மன்னிப்பு கேட்கிறேன்; குஷ்பு அறிக்கை

காங்கிரஸ் கட்சியை மூளை வளர்ச்சி இல்லாத கட்சி என விமர்சித்ததற்காக மன்னிப்பு கேட்கிறேன். பலருக்கு நான் ஏற்படுத்திய மன உளைச்சலை நான் உணர்கிறேன் என்று குஷ்பு மன்னிப்பு கேட்டுள்ளார்.

காங்கிரஸின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த குஷ்பு, டெல்லி சென்று பாஜகவில் இணைந்து கொண்டார். நேற்று சென்னை திரும்பிய அவருக்கு பாரதிய ஜனதா கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதன் பிறகு சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குஷ்பு, எதிர்க்கட்சியில் இருந்து காரணத்தால் ஆளுங்கட்சியை எதிர்த்து, கட்சிக்கு விசுவாசமாக இருந்தேன் என தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியை மூளை வளர்ச்சி இல்லாத கட்சி என்றும் விமர்சித்தார். இதற்கு மாற்றுத்திறனாளி அமைப்பினர் உட்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் மன்னிப்புக்கோரி குஷ்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: அவசரம், ஆழ்ந்த துயரம் மற்றும் வேதனையின் உச்சத்தில் ஒரு கணத்தில் சில சொற்றொடர்களை தவறாகப் பயன்படுத்தியதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். ஒரு பெண்ணாக இருப்பதால், நான் வழிநடத்தப்படுகிறேன், பாதிக்கப்படுகிறேன் என்ற கருத்து ஆட்சேபனைக்குரியது, தவறான கருத்து.

காங்கிரஸ் கட்சியை மூளை வளர்ச்சி இல்லாத கட்சி என விமர்சித்ததற்காக மன்னிப்பு கேட்கிறேன். பலருக்கு நான் ஏற்படுத்திய மன உளைச்சலை நான் உணர்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.