எதிலும் சமரசம் செய்து கொள்ளாமல் இயங்குவேன் - நிதிஷ்குமார்

பீகார் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தது. இந்த தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜனதா கூட்டணி, 125 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டுள்ளது. இந்த தேர்தலில், முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளத்தை விட பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இருப்பினும், ஏற்கனவே அறிவித்தபடி நிதிஷ்குமார்தான் முதல்-மந்திரி என்பதை பிரதமர் மோடி முதல் உள்ளூர் பா.ஜனதா நிர்வாகிகள் வரை மீண்டும் உணர்த்தி விட்டனர். இந்நிலையில், தேர்தல் வெற்றிக்கு பிறகு முதல்முறையாக நிதிஷ்குமார் நேற்று பேட்டி அளித்தபோது, நான் முதல்-மந்திரியாக பதவி ஏற்கும் தேதி குறித்து கூட்டணியில் இடம்பெற்றுள்ள 4 கட்சிகளும் வெள்ளிக்கிழமை கூடி ஆலோசனை நடத்தும். தற்போதைய சட்டசபையின் பதவிக்காலம், 29-ந் தேதிவரை இருப்பதால், போதிய கால அவகாசம் இருக்கிறது என்று கூறினார்.

மேலும் அவர், சட்டசபை கலைக்கப்பட வேண்டும். நான் ராஜினாமா கடிதம் சமர்ப்பிக்க வேண்டும். ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்ததாக எதிர்க்கட்சிகள் கூறுவது பற்றி நான் சொல்ல ஒன்றும் இல்லை. மத்தியில், தேசிய ஜனநாயக கூட்டணியில் லோக் ஜனசக்தி கட்சியை வைத்துக்கொள்வது பற்றி பா.ஜனதாதான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.

நான் முதல்-மந்திரியாக சுதந்திரமாக செயல்படுவதில் பிரச்சினை இருக்காது. எதிலும் சமரசம் செய்து கொள்ளாமல் இயங்குவேன் என நிதிஷ்குமார் தெரிவித்தார். பீகார் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதே போல் இடைத்தேர்தல் நடைபெற்ற அனைத்து இடங்களிலும் பாஜக வென்று ஆட்சியை தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.