இந்த சட்டம் நீக்கப்பட்டால் பேருந்து கட்டணம் குறையும்

கொழும்பு: போக்குவரத்து அமைச்சு தகவல்... பேருந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய மாத்திரம் பயணிகளை ஏற்றிச் செல்லும் சட்டத்தை நீக்கினால், 12 வீதத்தால், பேருந்து கட்டணத்தைக் குறைக்க முடியும் என போக்குவரத்து அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அவ்வாறு அந்த சட்டத்தை நீக்கினால், 34 ரூபாயாகவுள்ள குறைந்தபட்ச பேருந்து கட்டணம், 29 ரூபாயாக குறைவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையாக, பேருந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய மாத்திரம் பயணிகளை ஏற்றிச் செல்லும் சட்டத்தை நீக்குவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

போக்குவரத்து அமைச்சு முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இந்தச் சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

குறித்த சட்டத்தை நீக்குமாறு நான்கு சந்தர்ப்பங்களில் போக்குவரத்து அமைச்சு சுகாதார அமைச்சிற்கு எழுத்துமூலம் அறியப்படுத்தி இருந்தாக அவர் தெரிவித்துள்ளார்.