கனடாவில் இந்துக்கோவில் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு

கனடா: கனடாவில் இந்து கோவில் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் இருந்து பஞ்சாப் மாநிலத்தை பிரித்து தனி நாடாக அறிவிக்க வேண்டும் என காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தெரிவித்து வருகின்றனர். காலிஸ்தான் ஆதரவாளர்கள் உலகின் பல இடங்களில் உள்ளனர். குறிப்பாக கனடாவில் அதிக அளவில் உள்ளனர். அவர்கள் இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். காலிஸ்தான் செயல்பாடுகள் அதிகரித்து வருவதற்கு எதிராக இந்தியா தனது கவலையை கனடாவிடம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே இந்து கோவில்கள் கனடாவில் தாக்கப்படும் சம்பவம் நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி மாதம் மற்றும் ஏப்ரல் மாதம் இந்து கோவில்கள் தாக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்றிரவு பிரிட்டீஷ் கொலம்பியாவில் உள்ள லட்சுமி நாராயணன் கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதோடு கோவில் கதவில் ஜூன் 18-ந்தேதி நடைபெற்ற கொலையில் இந்தியாவின் பங்கு குறித்து கனடா விசாரணை செய்கிறது என போஸ்டரை ஓட்டிவைத்து சென்றுள்ளனர்.

மேலும், காலிஸ்தான் வாக்கெடுப்பு குறித்த போஸ்டரையும் ஒட்டி வைத்துள்ளனர். கனடாவின் சர்ரே பகுதியில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பான காலிஸ்தான் டைகர் படையின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். குருநானக் சீக்கியர் குருத்வாரா சாஹிப்பின் தலைவரான அவர், குருத்வாரா வளாகத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டதார்.

இதனைத் தொடர்ந்து இந்த செயலில் அவரது ஆதரவாளர்கள் இந்த செயலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.