உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில், நாளை முதல் வீடு வீடாக டோக்கன், விண்ணப்பம் விநியோகிக்கப்படும்


சென்னை: மகளிருக்கு ரூ.1000 உரிமைத்தொகை - நாளை முதல் டோக்கன் விநியோகம் ... திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் 1 கோடி குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் அறிவித்தார். குடும்பத் தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் மாதம் தோரும் ரூ.1,000 வழங்கிட ரூ.7,000 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

மாவட்ட ஆட்சியர்கள் திட்டமிட்டு, மாவட்ட மற்றும் வட்ட அளவிலான குழுக்களை நியமித்து இத்திட்ட செயல்பாடுகளை ஒருங்கிணைத்து கண்காணிப்பர். இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் அரசால் அச்சடிக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து அவை ரேஷன் கடைப் பணியாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இதையடுத்து இந்த விண்ணப்பங்களில் ரேஷன் அட்டை எண் மற்றும் பயனாளிகள் முகாம்களுக்கு வருகைபுரிய வேண்டிய தேதி மற்றும் நேரம் ஆகியவை இடம்பெற்றிருக்கும். அதில் நிர்ணயிக்கப்பட்ட கால அட்டவணைப் படி பயனர்கள் விண்ணப்பபதிவு முகாம்களுக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பப் பதிவு முகாம் காலை 9.30 முதல் பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 முதல் மாலை 5.30 மணி வரையும் நடத்தப்படும். ஒரு குடும்பத்துக்கு வழங்கப்பட்ட விண்ணப்பத்தை, வேறு குடும்பத்தினர் பயன்படுத்த முடியாது.

மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பம் மற்றும் டோக்கன்களை ரேஷன் கடை பணியாளர்கள், பயனர்களின் வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும். முகாம் நடக்கும் இடம் மற்றும் நேரம் பற்றி ரேஷன் கடைகளில் தமிழில் தகவல்பலகை அமைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எனவே அதன்படி நாளை முதல் ரேஷன் கடை பணியாளர்கள் டோக்கன் மற்றும் விண்ணப்பப் படிவங்களை பயனர்களுக்கு வீடு வீடாகச் சென்று விநியோகம் செய்யவுள்ளனர்.