புதுச்சேரியில் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் கிளை திறப்பு விழா

புதுச்சேரி: புதுச்சேரியில் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் கிளை திறப்பு விழா சிறப்பாக நடந்தது.

புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் விவேகானந்தர் மனித வள மேம்பாடு மற்றும் பண்பாட்டு மையத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. விவேகானந்தர் மனிதவள மேம்பாடு மற்றும் பண்பாட்டு மையத்திற்கு சுவாமி கௌதமானந்த மஹராஜ் அடிக்கல் நாட்டி பெயர்ப் பலகையைத் திறந்து வைத்தார்.

ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் ஓர் அங்கமாக இந்த மையம் திகழும். சுவாமி தர்மிஷ்டானந்த மகராஜ், மேலாளர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் சென்னை மற்றும் மடத்தின் துறவிகள், தன்னார்வத் தொண்டர்கள், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

அடிக்கல் நாட்டு விழாவைத் தொடர்ந்து ஸ்ரீராமகிருஷ்ண வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் சிறுவர், சிறுமிகளி நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

சுவாமி கௌதமானந்த மகராஜ் தெய்வத் திருமூவரின் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி, கற்பூர ஆரத்தி செய்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். சுவாமி தர்மிஷ்டானந்த மகராஜ் வரவேற்புரையாற்றினார்.

புதுச்சேரி ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி ஆத்மகனானந்த மகராஜ் சிறப்புரை ஆற்றினார். இண்டக்ரா சாஃப்ட்வேர் நிறுவன தலைவர் ஸ்ரீராம் சுப்ரமணியம் பேசினார். சுவாமி கௌதமானந்த மகராஜ் முக்கிய விருந்தினர்களுக்குப் பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.
தொடர்ந்து சுவாமி கௌதமானந்த மகராஜ் 10-வது மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை எழுதவிருக்கும் மாணவ, மாணவிகள் அச்சமின்றித் தேர்வை எதிர்கொள்ள அறிவுறுத்தித் தனது ஆசிகளை வழங்கினார். பள்ளி தாளாளர் எஸ். கே. கணேசன் நன்றி கூறினார்.