மீன்பிடி தடைக் கால நிவாரணத் தொகை அதிகரிப்பு

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் நடைபெற்று வரும் மீனவர்கள் நல மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், பாஜக ஆட்சிக்கு வந்த பின் மீனவர்கள் மீது 48 முறை தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது;9 ஆண்டுகளில் 619 மீனவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்;

தமிழ்நாடு மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு பாஜக அரசே பொறுப்பு. ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் மீனவர்கள் நலனுக்காக ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தி உள்ளோம். தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் மீனவர் குடும்ப மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 5%-லிருந்து 20%-ஆக அதிகரித்தியுள்ளோம்.

மேலும் மீனவர்களின் படகுகள் மற்றும் வலைகளை சேதப்படுத்துவது இலங்கையின் வாடிக்கையாக உள்ளது. மீனவர்கள் பாதுகாப்பாக வாழ, இந்தியாவில் வலுவான ஆட்சி அமைய வேண்டும் என்று பேசிய மோடி என்ன செய்தார்?பாஜக ஆட்சிக்கு வந்தால், ஒரு மீனவர் கூட உயிரிழக்க மாட்டார் எனக் கூறிய பிரதமரின் வாக்குறுதி என்ன ஆனது? கடல் அரிப்பை தடுக்க, படகுகளை பாதுகாக்க தூண்டில் வளைவுகள் அமைத்துக் கொடுத்து உள்ளோம்.


ஆண்டுக்கு விசைப்படகுக்கு டீசல் 18,000 லிட்டர், நாட்டுப்படகுகளுக்கு 4,000 லிட்டர் விற்பனை வரி விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது.குடிமைப்பணி தேர்வுக்காக மீனவ சமுதாய மாணவர்களுக்கு 6 மாத சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதனை அடுத்து மீன்பிடி தடைக் கால நிவாரணத் தொகை, 5000-ல் இருந்து ₹8000-ஆக உயர்த்தி வழங்கப்படும். தூத்துக்குடி நெல்லை மாவட்ட மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் 3400 லிட்டரில் இருந்து 3700 லிட்டராக வழங்கப்படும் என அவர் கூறினார்..