இணைய வழி திருடுவோர் எண்ணிக்கை உயர்வு... ஹைதராபாத்தில் ரூ.700 கோடி மோசடி

புதுடில்லி: இந்தியாவில் இணையம் வழியாக திருடுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஹைதராபாத்தில் 700 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினசரி போலீசாருக்கு ஏதாவது ஒரு ஆன்லைன் மோசடி தொடர்பான புகார் வந்து கொண்டிருக்கும் வேளையில், ஹைதராபாத்தில் 700 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி இதில் லெபனான் தீவிரவாதிகளுக்கும் பங்கிருப்பதாகத் தெரியவந்துள்ளது.

பகுதி நேர வேலை வாங்கித் தருவதாகக் கூறி லெபனானை தளமாகக் கொண்ட ஹெஸ்புல்லா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய சீனர்கள், ஹைதராபாத்தில் ரூபாய் 700 கோடி வரை மோசடி செய்துள்ளனர் என சைபர் கிரைம் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு கிரிப்டோ ஏஜென்சியிடமிருந்து பயங்கரவாத அமைப்புக்கு நிதி உதவி செய்யப்படுவது போலீசாருக்குத் தெரியவந்ததால், அந்த பயங்கரவாதக் குழுவின் வாலட் பிளாக் செய்யப்பட்டுள்ளது.

சமீபகாலமாகவே யூடியூப் வீடியோக்களுக்கு லைக் செய்வது, கூகுளில் ரிவ்யூ எழுதுவது என வீட்டிலிருந்தே செய்யும் எளிமையான பணிகள் என்கிற பெயரில் மிகப்பெரிய அளவில் மோசடி நடைபெற்று வருகிறது. இந்த மோசடி வலையில் சிக்கிய ஹைதராபாத்தை சேர்ந்த சிவகுமார் என்பவர், கடந்த ஏப்ரல் மாதம் 28 லட்சம் ரூபாயை இழந்ததாக காவல் துறைக்கு புகார் கொடுத்தார்.

அவரது புகாரின் அடிப்படையில் பணம் எங்கே பகிரப்பட்டுள்ளது என்பதை பின் தொடர்ந்தபோது, போலியான நிறுவனங்களின் பெயரில் உள்ள 48 வங்கிக் கணக்குகளுக்கு பணம் பகிரப்பட்டது தெரியவந்தது. இந்த 48 வங்கிக் கணக்குகளில் இருந்தும் சுமார் 580 கோடி ரூபாய் அளவிலான பணத்தை அப்பாவி பொதுமக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டது என சைபர் கிரைம் அதிகாரிகள் கண்டுபிடித்து இது தொடர்பாக நாடு முழுவதும் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் ஒரு போலி கணக்கு திறந்து கொடுத்தால் இரண்டு லட்சம் பணம் கொடுக்கப்பட்டது தெரியவந்தது. இப்படி மொத்தம் 61 போலி வங்கிக் கணக்குகள் மற்றும் 33 போலி நிறுவனங்கள் இருப்பது தெரியவந்தது. இந்த வங்கிக் கணக்குகளிலிருந்து கூடுதலாக 128 கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டது.

இப்படி ஏமாற்றப்பட்ட பணம் பரிமாறப்பட்ட ஐபி முகவரியை சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்தபோது, அது துபாய் ஐபி அட்ரஸைக் காட்டியுள்ளது. அவற்றை மேலும் ஆய்வு செய்தபோது சீனா நெட்வொர்க் உடன் இணைந்து இந்திய கணக்குகள் வாயிலாக இந்த மோசடி செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் சீனர்கள் என்பதும், இந்தியாவில் முடக்கப்பட்ட கிரிப்டோ வாலட் கணக்கு, லெபனானை தளமாகக் கொண்ட ஹெஸ்புல்லா பயங்கரவாதக் குழுவுக்குச் சொந்தமானது என்பதால், சீனர்கள் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு, இந்தியாவில் இந்த மோசடி வேலையை செய்திருக்கிறார்கள் என்பது அம்பலமாகியுள்ளது.