தொடர்மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

அதன்படி நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. தொடர்மழை காரணமாக நேற்று நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. நேற்று காலை 10 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. மேலும் மாலை 4 நிலவரப்படி வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிப்பதால் ஒகேனக்கல் வெறிச்சோடி காணப்பட்டது.

ஓராண்டாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள தொழிலாளர்களின் நலன் கருதி வெள்ளப்பெருக்கின் போது சேதமடைந்த பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடையை நீக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.