சென்னையில் மீண்டும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அதிகரிப்பு

தமிழகத்தில் நேற்று 5 ஆயிரத்து 951 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 91 ஆயிரத்து 303 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 32 ஆயிரத்து 454 ஆக உயர்ந்துள்ளது. ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 721 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் தான் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. இருப்பினும் கடந்த சில வாரங்களாக குறைந்து வந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.

சென்னையில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த வாரம் 1.4 சதவீதம் அதிகரித்தது. இதனால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 18 பகுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. அதன்படி அண்ணாநகர் மண்டலத்தில் அதிகபட்சமாக 12 தெருக்களுக்கும், ஆலந்தூரில் 10 தெருவுக்கும், வளசரவாக்கத்தில் 7 தெருவுக்கும், சோழிங்கநல்லூரில் 3 தெருவுக்கும், கோடம்பாக்கம், அடையாறு, பெருங்குடி மண்டலத்தில் தலா ஒரு தெருவுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.