தொடர் மழையால் வீடுர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி

விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த வாரம் நிவர் புயல் காரணமாக மாவட்டம் முழுவதும் தொடர்ந்து 3 நாட்களாக மழை பெய்தது. மழையின் காரணமாக ஏரி, குளங்கள், அணைகள் உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது.

அந்த வகையில் விழுப்புரம் அருகே உள்ள வீடுர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான செஞ்சி, மேல்மலையனூர் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள தொண்டி ஆறு, வராக நதியிலிருந்து வீடுர் அணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 1,300 கன அடியாக உயர்ந்தது. பின்னர் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து 100 கன அடியாக குறைந்தது.

இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வீடுர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அணையின் மொத்த நீர்மட்ட கொள்ளளவான 32 அடியில் தற்போது 27.5 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணை முழுவதும் தண்ணீர் நிரம்ப இன்னும் 5 அடிகள் உள்ளன. தொடர்ந்து, மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வீடுர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்யும்பட்சத்தில் இன்னும் ஒரு சில தினங்களில் அணை அதன் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அணையின் மூலம் தமிழகத்தில் 2,200 ஏக்கர், புதுச்சேரி மாநிலத்தில் 1,000 ஏக்கர் என 3,200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். தற்போது வீடுர் அணை நிரம்பி வருவதால் விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநில விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர் மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் அணையின் நீர்வரத்து நிலவரங்களை பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.