3 மாநிலங்களுக்கு அடுத்த 3 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை... இந்திய வானிலை ஆய்வு மையம்

சென்னை: நாடு முழுவதும் பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என்பதால் அடுத்த 3 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் 4 மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே அடுத்த 3 நாட்களுக்கு தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது.

இதனையடுத்து இன்று (ஆகஸ்ட் 04) பெய்து வரும் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் தேனி மாவட்டத்திலும் கனமழை எதிரொலியாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.தற்போது தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மிக தீவிரமடைந்த நிலையில் இன்னும் 2 நாட்களுக்கு கனமழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெள்ள நீர் அபாயம் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பல எடுக்கப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பு உள்ள பகுதிகளில் சிக்கி இருப்போர் மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தை,1077 மற்றும் 1070 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.