கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள முதல் 10 நாடுகள் பட்டியலில் இடம்பெற்றது இந்தியா!

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகநாடுகள் அனைத்திலும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் அடைந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளன. தற்போது 4-ம் கட்ட ஊரடங்கில் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு, உள்நாட்டு விமான சேவை இன்று தொடங்கி உள்ளது. ஜூன் 1ம் தேதி முதல் ரெயில் சேவையும் தொடங்க உள்ளது.

இந்த சூழ்நிலையில் இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 1,38,845 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4021 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 57,721 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதன்மூலம் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஈரானை பின்னுக்குத் தள்ளி, முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியா இடம்பெற்றுள்ளது. கொரோனா பாதிப்பில் இந்தியா தற்போது 10வது இடத்தில் உள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள முதல் 10 நாடுகள்
அமெரிக்கா - 1,686,436
பிரேசில்- 365,213
ரஷியா- 344,481
ஸ்பெயின்- 282,852
பிரிட்டன்- 259,559
இத்தாலி- 229,858
பிரான்ஸ்- 182,584
ஜெர்மனி-180,328
துருக்கி-156,827
இந்தியா-138,845.