மனித வளர்ச்சி குறியீட்டில் இந்தியாவுக்கு 132வது இடம்

புதுடெல்லி: மனித வளர்ச்சிக் குறியீட்டு அறிக்கையில் இந்தியா 132-வது இடத்தில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித வளர்ச்சி குறியீட்டு எண் என்பது உலகளாவிய நாடுகளில் வாழும் மனிதர்களின் ஆயுட்காலம், கல்வி மற்றும் தனிநபர் வருமானம் ஆகியவற்றின் அளவீடு ஆகும். இது நல்வாழ்வை அளவிடும் ஒரு மேம்பட்ட நிலையான வழிமுறையாகும்.

குறிப்பாக குழந்தைகளின் நலனில், இதன் மூலம் மனித வளர்ச்சியைப் பெருக்குவது ஆகும். இந்த நிலையில், ஐ.நா வெளியிட்டுள்ள 2020-2021-ம் ஆண்டுக்கான மனித வளர்ச்சிக் குறியீட்டு அறிக்கையில் 191 நாடுகளில் இந்தியா 132-வது இடத்தில் உள்ளது.

இலங்கை 73-வது இடத்திலும், சீனா 79-வது இடத்திலும், வங்காளதேசம் 129-வது இடத்திலும், பூடான் 127-வது இடத்திலும் இந்தியாவை விட மூன்னேறி உள்ளது. நேபாளம் (143), மியான்மர் (149), பாகிஸ்தான் (161) ஆகிய நாடுகள் இந்தியாவை விட பின்தங்கி உள்ளது. 2020 அல்லது 2021-ல் சுமார் 90 சதவீத நாடுகள் தங்கள் எச்.டி.ஐ மதிப்பில் சரிவை பதிவு செய்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.

மேலும் கொரோனா பாதிப்பை அடுத்து, உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் வாழ்க்கை மற்றும் எதிர்காலம் குறித்து மிகவும் கவலையுடனும் பாதுகாப்பற்றதாகவும் உணர்கிறார்கள் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.