சுற்றுச்சூழல் அவசர நிலையை எதிர்கொண்டுள்ள மொரீசியசுக்கு தொழில்நுட்ப உதவிப்பொருட்களை அனுப்பிய இந்தியா

வகாஷியோ கப்பல் உடைந்ததால், இந்தியப் பெருங்கடலில் டன் கணக்கில் டீசல் மற்றும் எண்ணெய் கசிந்து வருகிறது. இதனால் மொரீஷியஸ் தீவு மிகப்பெரிய சுற்றுச்சூழல் அவசரநிலையை எதிர்கொண்டு வருகிறது. டன் கணக்கிலான எண்ணெய் கடலில் கலந்துள்ள நிலையில், தொடர்ந்து சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், இந்தியா இந்தியக் கடலோர காவல் படையில் இருந்து 10 நபர்கள் அடங்கிய குழுவையும், 10,000 எண்ணெய் உறிஞ்சும் பேடுகள் போன்ற 30 டன் எடையிலான தொழில்நுட்ப உபகரணங்களை மொரீஷியசுக்கு அனுப்பியுள்ளது. மொரீஷியஸ் அரசின் கோரிக்கைக்கு இணங்க, இந்திய விமானப் படையின் சி17 க்ளோப்மாஸ்டர் விமானத்தில் இந்த உதவிப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிரதமர் மோடியின் தொலைநோக்கு திட்டமான சாகர் திட்டத்தின் அடிப்படையில், மனிதநேய அடிப்படையிலும், அண்டை நாடுகளின் பேரழிவு நிவாரணத்தின் அடிப்படையிலும் இந்த உதவிகள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில், இந்த அவசர கால உதவி இந்தியா மற்றும் மொரீசியசுக்கு இடையிலான நட்புறவை உணர்த்துவதாகவும், மொரீஷியஸ் மக்களின் அவசரகால தேவையின்போது இந்தியா உடன் இருக்கும் என அளித்த வாக்குறுதியின்படியும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.