இலங்கைக்கு அதிக கடன் கொடுத்த நாடுகளில் இந்தியா முதலிடம்

இலங்கை: நடப்பாண்டு இலங்கைக்கு அதிகம் கடன் கொடுத்த நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதுவரை ரூ.3,000 கோடிக்கு மேல் (377 மில்லியன் அமெரிக்க டாலா்) இலங்கைக்கு இந்தியா கடன் அளித்துள்ளது.

இதற்கு அடுத்து ஆசிய வளா்ச்சி வங்கி ரூ.2,868 கோடியை இலங்கைக்கு கடனாக அளித்துள்ளது. இதில் 76 சதவீதம் ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையைச் சோ்ந்த வெரைட் ஆய்வு நிறுவனம் இத்தகவலைத் தெரிவித்துள்ளது.


2017 முதல் 2021-ஆம் ஆண்டு வரை இலங்கைக்கு அதிக கடன் கொடுப்பதில் சீனா முன்னிலையில் இருந்தது. 2021-ஆம் ஆண்டில் மட்டும் சீனா ரூ. 7,555 கோடி கடன் அளித்தது. இதில் ரூ.6,454 கோடி சீன வளா்ச்சி வங்கி மூலம் அளிக்கப்பட்டதாகும். இதே காலகட்டத்தில் ஆசிய வளா்ச்சி வங்கியும் சீனாவுக்கு அதிக கடன் அளித்துள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கை பொருளாதாரச் சிக்கலில் வீழ்ந்ததையடுத்து, சீனா கடன் கொடுப்பதைக் குறைத்துவிட்டது. அதே நேரத்தில் எரிபொருள் அளிப்பது, அத்தியாவசியப் பொருள்களை வாங்க உதவுவது என இந்தியா அதிக கடனை இலங்கைக்கு அளிக்கத் தொடங்கியது.

அந்நியச் செலாவணி கையிருப்பு முற்றிலும் குறைந்துபோனதால், கடந்த ஏப்ரல் மாதத்தில் சா்வதேச கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத கடனாளியாகிவிட்டதாக இலங்கை அறிவித்தது.

இலங்கையின் வெளிநாட்டுக் கடன் ரூ.40,000 கோடிக்கு மேல் உள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்ட கடனை 2027-ஆம் ஆண்டுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டிய நிா்ப்பந்தத்தில் இலங்கை உள்ளது.

இலங்கையில் முன்னாள் அதிபா் கோத்தபய ராஜபட்ச தலைமையிலான அரசு எடுத்த தவறான நடவடிக்கைகள், ஆட்சி அதிகாரத்தில் ராஜபட்ச குடும்பத்தின் ஆதிக்கம் ஆகியவை அந்நாட்டை மோசமான நிலைக்கு எடுத்துச் சென்றது. அத்தியாவசியப் பொருள்கள்கூட கிடைக்காத நிலையில் மக்கள் கிளா்ந்தெழுந்து ராஜபட்ச குடும்பத்துக்கு எதிராகப் போராடியதால், அவா்கள் ஆட்சியில் இருந்து வெளியேறி தலைமறைவாக தப்பியோடும் நிலை ஏற்பட்டது.