திருமணம் செய்து கொள்ள கூறியபோது மிரட்டல்… இளம்பெண் எடுத்த முடிவு

திருச்சி: திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகேயுள்ள சரளபட்டியைச் சேர்ந்த சின்னசாமி மகள் பவித்ரா (25). இவரும் பக்கத்து வீட்டை சேர்ந்த தேவராஜ் மகன் தமிழரசன்(22) என்பவரும் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் ஒன்றாக வேலை பார்த்தனர்.

இருவரும் கடந்த நான்கு வருடமாக காதலித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பவித்ரா தமிழரசனிடம் வலியுறுத்தியுள்ளார். இதனை ஏற்க மறுத்த தமிழரசன் பவித்ராவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் மனமுடைந்த பவித்ரா தனது பெற்றோருடன் திருச்சி மாவட்டம் மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2-ம் தேதி தமிழரசன் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளார். இந்நிலையில் இது சம்பந்தமாக அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் பால கிருத்திகா பாதிக்கப்பட்ட பெண் மற்றும் தமிழரசனிடம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து கொண்டிருந்தார்.

அப்போது பவித்ரா திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி சாலையில் தீ குளிக்க முயன்றார். அப்போது அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர்கள் விரைந்து செயல்பட்டு பவித்ராவை தடுத்து நிறுத்தி மீட்டனர்.

அப்போது பவித்ராவின் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியதையடுத்து மறியலை கைவிட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் தமிழரசன் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். காவல் நிலையம் அருகே இளம்பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.