இந்தியாவில் கொரோனா சிகிச்சையில் புதிய மருந்து அறிமுகம் - மத்திய அரசு அறிவிப்பு

கொரோனா வைரஸுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கான முயற்சியில் பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் முழுவீச்சில் களமிறங்கியுள்ளனர். இருப்பினும் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து அவர்களது உயிர்களை காப்பாற்ற வேண்டிய அத்தியாவசிய தேவை எழுந்துள்ளது. இதனால் பிற நோய்களுக்கு தந்து உபயோகத்தில் இருக்கிற மருந்துகளையும் தந்து சோதித்து வருகின்றனர்.

அதன்படி, இந்தியாவில் மலேரியா காய்ச்சலுக்கு தரப்படுகிற ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை கொரோனா வைரஸ் தொற்றின் ஆரம்ப கட்டத்தில் நோயாளிகளுக்கு தரலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுமதியளித்தது. வைரஸ் எதிர்ப்பு மருந்தான ரெம்டெசிவிர் மருந்தையும் கொரோனா நோயாளிகளுக்கு தரலாம் என கடந்த 13-ந் தேதி மத்திய அரசு அனுமதியளித்தது.

கொரோனா வைரஸ் பாதிப்பு மிதமாக இருக்கிற சூழலில் நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சையும் அளிக்கவும் அனுமதியளிக்கப்பட்டது. இந்நிலையில், டெக்ஸாமெத்தாசோன் என்ற மருந்தை கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்கு அளிக்கலாம் என மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது. இது இந்தியாவில் நுரையீரல் தொற்று நோய்களுக்கு பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் மருந்தாகும்.

டெக்ஸாமெத்தாசோன் மருந்தால் கிடைக்கக்கூடிய பலன்கள் பற்றிய சான்றுகளை ஆராய்ந்தும், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையை பெற்று பரிசீலித்தும் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெக்ஸாமெத்தாசோன் மருந்தை கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களுக்கு தரலாம் என இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞானிகள் ஏற்கனவேற் கூறியது குறிப்பிடத்தக்கது.