நிறுவனங்கள் சம்பளத்தை குறைத்தாலும் வருமானவரி பழையபடியே பிடிக்கப்படும் என்று தகவல்

சம்பளம் குறைந்தாலும் பழைய சம்பளத்தின் படியே வருமான வரி பிடித்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

பல நிறுவனங்கள் தற்போது ஊழியர்களின் சம்பளத்தை குறைத்து வரும் நிலையில், அந்த குறைப்பு அடிப்படை சம்பளம், வீட்டு வாடகை படி உள்ளிட்டவற்றில் பிரதிபலிக்கவில்லை என்றால் பழைய சம்பளத்தின் படியே வருமான வரி பிடித்தம் செய்யப்படும் என பட்டயக் கணக்காளர்கள் எச்சரிக்கின்றனர்.

கொரோனா வைரஸ் காரணமாக உலக அளவில் பொருளாதாரம் சுருங்கியுள்ளது. இந்தியாவில் 50 நாட்களுக்கு மேலாக தொடரும் ஊரடங்கால் பல்வேறு தொழில், வியாபார நிறுவனங்களில் வருவாய் சரிவடைந்துள்ளது. இதன் காரணமாக அதிக சம்பளம் பெறும் ஊழியர்களின் சம்பளத்தை குறைத்துள்ளனர்.

இந்த சம்பள குறைப்பு என்பது வெறுமனே இல்லாமல், சம்பளத்தின் பல்வேறு கூறுகளான அடிப்படை ஊதியம், வீட்டு வாடகைப் படி, இதர படிகள் உள்ளிட்டவற்றிலும் பிரதிபலிக்க வேண்டும். இல்லையென்றால் பழைய சி.டி.சியின் படியே வருமான வரி பிடித்தம் செய்யப்படக் கூடும் என்கின்றனர்.

இருப்பினும் சிலர் படிவம் 16 தான் சம்பளத்தில் வரி பிடித்தம் பற்றி இறுதியானது என கூறுகின்றனர். வருமான வரி சட்டங்களின் படி நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் அல்லது பெறப்பட்ட சம்பளம் இவற்றில் எது முந்தையதோ அதன் படி வரி விதிப்பார்கள். மறுபுறம், பணம் செலுத்தும் நேரத்தில் டி.டி.எஸ் கழிக்கப்படுகிறது.

எப்படியிருப்பினும், கொரோனா வைரஸ் காரணமாக சம்பளம் குறைக்கப்படும் போது அவை சி.டி.சி.,யிலும் குறைக்கப்படுகிறதா என்பதை தங்கள் நிறுவனங்களிடம் பேசி உறுதி செய்துகொள்வது நல்லது.