ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் ராகுல்காந்தி என்று தகவல்

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சில மாதங்களுக்கு முன் இந்திய ஒற்றுமை யாத்திரையை நிறைவு செய்தார். இந்நிலையில் ராகுல் காந்தியின் ஐரோப்பிய சுற்றுப்பயணம் தற்போது உறுதியாகியுள்ளது.

அடுத்து, நாட்டின் மேற்குப் பகுதியில் இருந்து கிழக்கு நோக்கி மலையேறத் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லடாக் பகுதிக்கு சென்ற ராகுல், பொதுமக்களிடம் கலந்துரையாடிவிட்டு டெல்லி திரும்பினார்.

லடாக் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அவர் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வார் என முன்னதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ராகுல் காந்தியின் ஐரோப்பிய சுற்றுப்பயணம் தற்போது உறுதியாகியுள்ளது. அதன்படி, அடுத்த மாதம் (செப்டம்பர்) 6-ம் தேதி டெல்லி புறப்பட்டு செல்கிறார். ஐரோப்பாவில் உள்ள பெல்ஜியம், பிரான்ஸ், நார்வே ஆகிய நாடுகளுக்கு 5 நாள் பயணமாக ராகுல் செல்கிறார்.

பயணத்தின் போது அங்குள்ள இந்திய வம்சாவளி மக்களை சந்தித்து பேச உள்ளார். தற்போதைய சுற்றுப்பயணத்தின்படி, செப்டம்பர் 7-ம் தேதி பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரில் ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்ற உறுப்பினர்களை ராகுல் சந்திக்க உள்ளார்.

இதையடுத்து, வரும் 8-ம் தேதி பாரீஸ் பல்கலைக்கழகத்தில் அவர் உரையாற்றுகிறார். 9-ம் தேதி பிரான்ஸ் தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்திக்கிறார். பயணத்தின் இறுதி நாளான 10-ம் தேதி அவர் நார்வேயின் ஆஸ்லோ நகருக்கு செல்கிறார்.

இதனிடையே பல்வேறு செய்தியாளர் சந்திப்புகளிலும் ராகுல் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஜி20 மாநாடு நடைபெறவுள்ள 9 மற்றும் 10-ம் தேதிகளில் ஐரோப்பிய நாடுகளுக்கு ராகுல் பயணம் மேற்கொள்வது அரசியல் வட்டாரத்தில் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.

அமெரிக்காவில் இந்திய ஜனநாயகம் குறித்து ராகுல் பேசியதாக பா.ஜ.க. ஏற்கனவே விமர்சித்துள்ளது. வன்மையாக கண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.