சந்திரனை நோக்கிய பயணத்தை விண்கலம் தொடங்கியதாக தகவல்

ஸ்ரீஹரிகோட்டா: சந்திரயான்-3 திட்டத்தின் முக்கிய கட்டமாக, புவிவட்டப் பாதையிலிருந்து சந்திரனை நோக்கிய பயணத்தை விண்கலம் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் தொடங்கியுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்தியாவின் கனவு திட்டங்களில் ஒன்றான நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்கு, கடந்த 14 ஆம் தேதி மதியம் 2.35 மணியளவில் சந்திரயான்-3 விண்கலம் விண்ணிற்கு ஏவப்பட்டது. குறைந்தபட்சம் 170 கிலோ மீட்டர் தொலைவும் அதிகபட்சம் 36 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தொலைவும் கொண்ட புவி நீள் வட்ட சுற்றுப்பாதையில், சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

இது புவிவட்டப் பாதையில் படிப்படியாக 5 முறை உயரம் அதிகரிக்கப்பட்டது. இதன் முக்கிய கட்டமாக, புவிவட்டப் பாதையிலிருந்து சந்திரனை நோக்கிய பயணத்தை சந்திரயான்-3 விண்கலம் தொடங்கியுள்ளது.இதற்காக பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12.15 மணியளவில் உந்துவிசை அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, புவிவட்டப் பாதையிலிருந்து விலகி, சந்திரனை நோக்கிய பயணத்தை சந்திரயான்-3 விண்கலம் தொடங்கியுள்ளது. இது அடுத்தகட்டமாக சந்திரனின் வட்டப் பாதைக்கு வரும் 5-ம் தேதி சென்றடையும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அங்கு வட்டப் பாதையின் உயரம் படிப்படியாக குறைக்கப்பட்டு, நிலவில் 23-ம் தேதி மாலை 5.47 மணிக்கு தரையிறங்கச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.