கொரோனாவை ஒழிக்க சிறிது காலமாகலாம்; பாதுகாப்பு செயலாளர் தகவல்

சிறிது காலமாகலாம்... நாட்டிலிருந்து கொரோனாவை இல்லாதொழிக்க சிறிது காலமாகலாம் என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார்.

பொதுமக்களை சுகாதார வழிகாட்டுதல்களை இறுக்கமாக கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ள அவர், நோய் தொடர்பான தகவல்களை மறைக்கவேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். சமூக நிகழ்வுகளில் ஒன்றுகூடுவதை பொதுமக்கள் தவிர்க்கவேண்டும் எனவும் வீடுகளில் இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பொதுமக்கள், முதியவர்கள் மற்றும் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து விசேட கவனம் செலுத்தவேண்டும் எனவும் பாதுகாப்பு செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனாதிபதியும் அரசாங்கமும் முப்படையினரும் சுகாதார அதிகாரிகளும் நாட்டிலிருந்து கொரோனாவை ஒழிப்பதற்கான அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர் எனவும் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார்.

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பகுதியை அடையாளம் கண்டபின்னர் சுகாதார அதிகாரிகளும் புலனாய்வு பிரிவினரும் நோய் எவ்வாறு பரவுகின்றது என்பதை கண்டுபிடித்து அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கின்றனர் எனவும் அதன் பின்னர் அந்த பகுதியை முடக்குவதற்கு அல்லது தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.