பசுவதை தடை சட்ட மசோதாவை ஜனதா தளம்(எஸ்) எதிர்க்கிறது - முன்னாள் பிரதமர் தேவகவுடா

கர்நாடக அரசு கொண்டு வந்துள்ள பசுவதை தடை சட்ட மசோதா குறித்து முன்னாள் பிரதமர் தேவகவுடா வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடகத்தில் பசுவதை தடை சட்டம் ஏற்கனவே அமலில் உள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு முதல்-மந்திரி எடியூரப்பா, இதில் உள்ள தண்டனை மற்றும் அபராதத்தை 7 மடங்கு உயர்த்தி அந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தபோது இந்த சட்ட மசோதாவை எதிர்த்து எதிர்க்கட்சிகளாக இருந்த காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் தர்ணா நடத்தியது என தெரிவித்தார்.

அதையும் மீறி ஆளும் கட்சியாக இருந்த பா.ஜனதா, அந்த மசோதாவை நிறைவேற்ற கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. அப்போது கவர்னராக இருந்த சதுர்வேதியை நான் நேரில் சந்தித்து, அந்த சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக்கூடாது என்று கேட்டுக் கொண்டேன். இதையடுத்து அவர், அந்த மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார். மத்திய அரசு அந்த மசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பியதாக தேவகவுடா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், அப்போதும் நான் ஜனாதிபதியை நேரில் சந்தித்து, அந்த மசோதாவில் உள்ள சில அம்சங்கள் ஒரு குறிப்பிட்ட சமூக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் எதிராக உள்ளதாக கூறி ஒப்புதல் வழங்கக்கூடாது என்று கூறினேன். அதன்படி கர்நாடக அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக அந்த சட்ட மசோதா வாபஸ் பெறப்பட்டது என கூறினார்.

இத்தகைய சூழ்நிலையில் பா.ஜனதா அரசு, பசுவதை தடை சட்டத்தில் மீண்டும் அதே திருத்தங்களை செய்து, சட்டசபையில் நிறைவேற்றியுள்ளது. மேல்-சபையிலும் நிறைவேற்ற முயற்சி செய்து வருகிறது. இதன் மூலம் சமூகத்தில் அமைதிக்கு பங்கம் ஏற்படும். மக்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும். அதனால் இந்த சட்ட மசோதாவை ஜனதா தளம்(எஸ்) கட்சி முழுமையாக எதிர்க்கிறது என தேவகவுடா தெரிவித்துள்ளார்.