கமலா ஹாரிசும் நானும் நட்பு நாடுகளுடனான உறவை ஆழமாக மதிக்கிறோம் - ஜோ பிடன்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 3-ம் தேதி நடக்கிறது. இந்நிலையில் புளோரிடா மாகாணம், வெஸ்ட் பாம் பீச்சில் உள்ள நூலகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு டிரம்ப் நேற்று காலை சென்று ஓட்டு போட்டார். அங்கிருந்த டிரம்பின் ஆதரவாளர்கள், தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்று ஜனாதிபதி பதவி வகிக்க வேண்டும் என்ற தங்கள் விருப்பத்தை வெளிக்காட்டும் வகையில் “இன்னும் 4 ஆண்டுகள்” என கோஷமிட்டனர்.

முக கவசம் அணிந்து வந்து ஓட்டு போட்ட அதிபர் டிரம்ப் அப்போது அளித்த பேட்டியில், நான் டிரம்ப் என்ற பையனுக்கு ஓட்டு போட்டேன் என்று கூறினார். குடியரசு கட்சி வேட்பாளரான டிரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பிடன் இன்னும் ஓட்டு போடவில்லை. அவர் டெலவாரேயில் 3-ம் தேதி ஓட்டு போடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இரு வேட்பாளர்களுக்கும் இடையேயான இறுதி நேரடி விவாதம் இரு தினங்களுக்கு முன்னர் நடந்தபோது, அதிபர் டிரம்ப், டிரம்ப் சீனா, இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் காற்று மாசுபாடு காரணமாக அசிங்கமாக இருக்கிறது என்றார். இதனால் டிரம்புக்கு எதிரான விமர்சனங்கள் கிளம்பின. இந்தியாவுக்கு வருகை புரிந்த போது அதன் அசிங்கம் அவருக்கு தெரியவில்லையா என்ற கண்டனம் தெரிவித்தனர்.

தற்போது ஜோ பிடன், நமது நண்பர்களை பற்றி நீங்கள் இப்படி பேசக்கூடாது. பருவநிலை மாற்றம் போன்ற உலகளாவிய சவால்களை உங்களை போன்று தீர்க்கக் கூடாது. கமலா ஹாரிசும் நானும் நட்பு நாடுகளுடனான உறவை ஆழமாக மதிக்கிறோம். வெளியுறவுக் கொள்கையில் மரியாதை செலுத்துவோம் என்று கூறினார்.