நண்பர் ரஜினியிடம் கேட்க மாட்டேனா? கமல்ஹாசன்

ரஜினியை அடுத்து இன்று கமல்ஹாசன் காலை 11 மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் கூறி வந்த போது ரஜினி சம்பந்தப்பட்ட கேள்வியும் எழுந்தது.

ரஜினி அரசியலுக்கு வராவிட்டால் நீங்கள் ரஜினியிடம் ஆதரவு கேட்பீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன் 'எல்லோரிடமும் நான் ஓட்டு கேட்கும்போது நண்பர் ரஜினியிடம் கேட்க மாட்டேனா? கண்டிப்பாக ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்' என்று கூறினார்.

மேலும் ரஜினியின் அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், 'ரஜினிக்கு அரசியலை விட அவரது உடல் ஆரோக்கியம் ரொம்ப முக்கியம். அவர் நலமாக இருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம்' என்றும் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, விருப்ப ஓய்வு பெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். கட்சியில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபுவை கமல்ஹாசன் பொதுச்செயலாளராக நியமித்தார்.