வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் கர்நாடகம் முதன்மை மாநிலமாக விளங்குகிறது - எடியூரப்பா

பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் இந்திய ஜப்பான் வர்த்தக அமைப்பு சார்பில் இந்திய ஜப்பான் வர்த்தகம் தொடர்பான காணொலி கருத்தரங்கு நடைபெற்றது. இதனை முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று தொடக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவும், ஜப்பானும் இயல்பான பங்குதாரர்கள். இருநாடுகளுக்கும் இடையே உள்ள உறவை பலப்படுத்த வேண்டும் என்று கூறினார்.

ஜனநாயகம், தனிநபர் சுதந்திரம், சட்டம் போன்றவற்றில் இருநாடுகளும் ஒற்றுமையாக உள்ளது. பொருளாதார மாற்றத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ள இந்தியா, அனைத்து துறைகளிலும் ஜப்பான் நாட்டின் நிறுவனங்களின் முதலீடுகளை ஊக்குவித்து வருகிறது. இருநாடுகளின் சரக்கு மற்றும் சேவைகளின் வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்காகவே இந்தியா மற்றும் ஜப்பான் இடையே ஒருங்கிணைந்த பொருளாதார பங்களிப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அதிகம் ஈர்ப்பதில் இந்தியாவிலேயே கர்நாடகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. கொரோனாவுக்கு பிறகு பொருளாதார நடவடிக்கைகளை விரிவுப்படுத்தும்போது, ஜப்பானில் இருந்து கர்நாடகத்திற்கு ஈர்க்கப்படும் தொழில் முதலீடுகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்படும். தரமான மனித வளம், உயர்தர கல்விநிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு ஊக்கம் போன்ற காரணமாக கர்நாடகத்தில் முதலீடுகள் அதிகரித்துள்ளதாக எடியூரப்பா கூறினார்.

மேலும் அவர், தொழில் முதலீடுகளுக்கான அனுமதிகளை வழங்குவதற்காக புதிய தொழில் கொள்கைகையை கர்நாடக அரசு கொண்டு வந்துள்ளது. இதற்காக சட்டத்திலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் தொழில் தொடங்குவதற்கான விதிமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. தொழில் தொடங்கு விரும்பும் தொழில் முதலீட்டாளர்களுக்காக ஏராளமான சலுகைகளையும் அரசு அறிவித்திருப்பதாக கூறினார்.