பிரிவினைவாதிகளை விட காஷ்மீர் அரசியல்வாதிகள் ஆபத்தானவர்கள் - ஜிதேந்திர சிங்

ஜம்மு காஷ்மீரின் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு வெளியான பின் முதன் முறையாக பேட்டி அளிக்கையில் பேசியபோது, ஜம்மு காஷ்மீர் கொடி மீண்டும் கொண்டு வரப்பட்டால் மட்டுமே மூவர்ணக் கொடியை ஏற்றுவோம் என்று கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவர், சுதந்திர, ஜனநாயக, மதச்சார்பற்ற இந்தியாவுடன் தான் தங்களுக்கு இணக்கம் என்றும் இன்றைய இந்தியாவுடன் நாங்கள் சவுகரியமாக இல்லை என்றும் முப்தி கூறியிருந்தார். அவரது கருத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நாட்டின் தேசியக் கொடி குறித்து மெகபூபா முப்தி தெரிவித்த கருத்துக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மெகபூபா முப்தியை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது. தற்போது காஷ்மீரின் அரசியல்வாதிகள் பிரிவினைவாதிகளை விட ஆபத்தானவர்கள் என மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய மந்திரி ஜிதேந்திர சிங், காஷ்மீரின் அரசியல்வாதிகள் என்று அழைக்கப்படுபவர்கள் சில சமயங்களில் வெளிப்படையாக அடையாளம் காணப்பட்ட பிரிவினைவாதிகளை விட ஆபத்தானவர்கள். பதவி இருக்கும்வரை நாட்டின் பெருமை பேசிவிட்டு பதவி போனதும் பாகிஸ்தானின் குரலில் பேசுவதாக கூறினார்.