குஷ்பு விலகியதால் காங்கிரஸ் கட்சிக்கு எந்த இழப்பும் இல்லை; கே.எஸ்.அழகிரி கருத்து

கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியில் இருந்த குஷ்பு, இன்று பாஜகவில் இணையவுள்ளார். இந்த நிலையில் குஷ்புவின் இந்த மாற்றம் குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதன் விபரம் வருமாறு:-

கோபண்ணா: காங்கிரசிலிருந்து குஷ்பு விலக அவர் கணவர் சுந்தர்.சி காரணம். பாஜகவிடம் தனது கொள்கையை அடகு வைத்துவிட்டார் குஷ்பு. ஏற்ற கொள்கையை, விட்டுக் கொடுத்துவிட்டு, நேர் எதிர் கொள்கைக்கு பலியாகியுள்ளார்.

கே.எஸ்.அழகிரி: காங்கிரஸ் தொண்டர்கள் குஷ்புவை நடிகையாகதான் பார்த்தார்களே தவிர, ஒரு நிர்வாகியாக பார்க்கவில்லை. குஷ்பு விலகியதால் காங்கிரஸ் கட்சிக்கு எந்த இழப்பும் இல்லை. இங்கு அவர் தாமரை இலை மேல் தண்ணீர் போலதான் இருந்தார்.

அமைச்சர் ஜெயகுமார்: பாஜகவில் நடிகை குஷ்பு இணைவது எனக்கு மகிழ்ச்சி என்று கூறினார். அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜகவில் குஷ்பு இணைவதில் மகிழ்ச்சி.

கராத்தே தியாகராஜன்: ஈவிகேஎஸ் இளங்கோவன் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்தவரை, எல்லாம் நன்றாகப்போனது. குஷ்புவிற்கு உரிய அந்தஸ்து தரப்பட்டது. ஆனால் கட்சி தலைவராக அழகிரி வந்தபிறகுதான் இப்படி எல்லாம் நடக்குது. குஷ்பு காங்கிரசை விட்டு விலகப் போகிறார் என்ற தகவல் வந்ததுமே, உடனே அவரை வீட்டுல போய் பார்த்திருக்கனும். அவர் குறைகளை கேட்டு, அதை நிவர்த்தி செய்திருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட, முன்னாள் மேயரான, நைனார் நாகேந்திரன் பாஜகவிலிருந்து விலகி, திமுகவில் சேரப்போகிறேன்னு சொன்னதும் கொரோனா தொற்று காலத்திலும், பாஜக தலைவர் எல்.முருகன், நைனார் வீட்டுக்கு நேராக போனார். அவரை சமாதானம் செய்தார். அதுபோல அழகிரி போயிருக்க வேண்டும்.

இதேபோல் பல தலைவர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.