தொடர் மழை: முழுகொள்ளளவை எட்டும் தருவாயில் குமரி மாவட்ட அணைகள்

குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. மலையோர பகுதிகளில் சாரல் மழை நீடிப்பதால் அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து உள்ளது.

77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 72 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 986 கனஅடி நீர்வரத்தும், அணையில் இருந்து வினாடிக்கு 550 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 45.10 அடியாகும். அணைக்கு வினாடிக்கு 814 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 204 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மறுகால்வழியாக அணையில் இருந்து 1,084 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

அணை பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை நீடிப்பதாலும், அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டதாலும் குழித்துறை தாமிரபரணி ஆறு மற்றும் பல்வேறு நீர்நிலைகள் போன்றவற்றில் மழைநீர் கரையை தொட்டவாறு பாய்ந்து ஓடுகிறது.

திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நாகர்கோவில் மக்களின் குடிநீர் ஆதாரமாக இருந்து வரும் முக்கடல் அணை முழு கொள்ளளவை எட்டும் தருவாயில் உள்ளது. அதாவது 25 அடியில் 24.2 அடியை எட்டியுள்ளது. சிற்றார் -2 14.66 அடியாகவும், பொய்கை அணை 17.30 அடியாகவும் உள்ளது. மாம்பழத்துறையாறு அணை முழுகொள்ளளவான 54.12 அடியை எட்டியுள்ளது.