கிர்கிஸ்தான் ஜனாதிபதி சூரன்பே ஜீன்பெகோவ் பதவி விலகினார்

நாட்டில் நிலவும் அரசியல் அமைதியின்மைக்கு மத்தியில் கிர்கிஸ்தானின் ஜனாதிபதி சூரன்பே ஜீன்பெகோவ் (Sooronbai Jeenbekov) பதவி விலகினார்.

பதவி விலக முடிவு செய்தமை குறித்து சூரன்பே ஜீன்பெகோவ் கூறுகையில், ‘நான் அதிகாரத்தில் ஒட்டிக்கொள்ளவில்லை. கிர்கிஸ்தான் வரலாற்றில் மக்கள் மீது இரத்தக்களரி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதித்த ஒரு ஜனாதிபதியாக நான் கீழே செல்ல விரும்பவில்லை. நான் இராஜினாமா செய்வதற்கான முடிவை எடுத்துள்ளேன்.

இராணுவ மற்றும் பாதுகாப்புப் படையினர் தங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்தி அரச குடியிருப்பைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள். இரத்தம் தவிர்க்க முடியாமல் சிந்தப்படும். ஆத்திரமூட்டல்களுக்கு விழக்கூடாது என்று இரு தரப்பினரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்’ என கூறினார்.

ஒக்டோபர் 4ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், போட்டியிட்ட 120 இடங்களில் இரண்டு அரசாங்க சார்பு கட்சிகள் 107 இடங்களை வென்றதையடுத்து, இதில் மோசடி இடம்பெற்ற கூறி தலைநகர் பிஷ்கெக்கில் எதிர்ப்பாளர்கள் வீதிகளில் இறங்கி போராடினர். இந்த மோதலைத் தொடர்ந்து தேர்தல் இரத்து செய்யப்பட்டது.

புதிய தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் இராஜினாமா செய்வதாக ஜீன்பெகோவ் முன்பு கூறியிருந்தார். தொடர்ந்தும் அமைதியின்மை தொடர்ந்தது. இதையடுத்து வீதிகளில் ஏற்பட்ட மோதல்களினால், ஜீன்பெகோவ் அவசரகால நிலைமையை அறிவித்தார்.

இதனால் ஒருவர் உயிரிழந்ததோடு, குறைந்தது 1,200 பேர் காயமடைந்தனர். இவ்வாறான தொடர்ச்சியான அழுத்தங்களுக்கு மத்தியில் சூரன்பே ஜீன்பெகோவ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.