பா.ஜனதா சார்பில் திருத்தணியில் இருந்து வெற்றிவேல் யாத்திரை; எல்.முருகன் தகவல்

அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிப்பது தொடர்பான மசோதாவுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் பா.ஜ.க. தலைவர் எல்.முருகன், மற்றும் நிர்வாகிகள் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை நேற்று சந்தித்தனர். அப்போது உள் ஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததற்காக கவர்னருக்கு, பா.ஜ.க. நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.

இதனையடுத்து தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன் சென்னை கமலாலயத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக பா.ஜனதா சார்பில், வருகிற 6-ந் தேதி காலை 10 மணியளவில் திருத்தணியில் இருந்து வெற்றிவேல் யாத்திரை தொடங்க இருக்கிறது. இந்த யாத்திரை முருகனின் ஆறுபடை வீடுகள் உள்பட தமிழகம் முழுவதும் செல்ல உள்ளது. இறுதியாக டிசம்பர் 6-ந் தேதி திருச்செந்தூரில் யாத்திரை நிறைவு பெறுகிறது.

இந்த யாத்திரையில் பா.ஜனதா தேசிய நிர்வாகிகள், மத்திய மந்திரிகள், முக்கியமான மாநிலத்தின் முதல்வர்களும் பங்கேற்க உள்ளனர். நிறைவு நிகழ்ச்சியில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொள்ள உள்ளார். யாத்திரையின் நோக்கம் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மத்திய அரசின் திட்டங்களை மக்கள் மத்தியில் எடுத்து சொல்வதாகும். இந்த யாத்திரை தமிழகத்தின் மிகப்பெரிய திருப்பு முனையாக அமையும்.

ரஜினிகாந்த் மிகப்பெரிய ஆன்மிகவாதி. தேசிய சிந்தனை உடையவர். அவர் அரசியலுக்கு வருவதை பா.ஜனதா எப்போதும் வரவேற்கும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நல்ல ஆட்சியை வழங்கி வருகிறார். எளிமையானவராகவும், மக்கள் எளிதில் அணுகக்கூடிய முதல்-அமைச்சராகவும் எடப்பாடி பழனிசாமி உள்ளார். கொரோனா பேரிடரைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசுடன் இணைந்து தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தற்போதைய சூழலில் 3-ம் அணி அமைய வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.