சர்வதேச விசாரணை அழைப்புகளை நிராகரித்த லெபனான் அதிபர் மைக்கேல் அவுன்

லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்து சிதறியதால் அந்நகரமே உருகுலைந்தது. இந்த வெடி விபத்தில் 150 பேர் உயிரிழந்தனர். 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். மேலும், இந்த வெடி விபத்தால் சுமார் 3 லட்சம் பேர் வீடுகளை இழந்து பரிதவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பெய்ரூட்டில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக ஒளிவு மறைவில்லாமல் சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என லெபனான் நாட்டின் அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். லெபனானுக்கு பயணம் மேற்கொண்ட பிரான்ஸ் அதிபர் மெக்ரோனும் சுதந்திரமான விசாரணையை வலியுறுத்தினார்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையமும் இந்த வெடி விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தியது. தற்போது பெய்ரூட் வெடி விபத்து தொடர்பாக விசாரணை நடத்தும் சர்வதேச விசாரணை அழைப்புகளை லெபனான் அதிபர் மைக்கேல் அவுன் நிராகரித்துள்ளார்.

இதுகுறித்து லெபனான் அதிபர் மைக்கேல் அவுன் அளித்த பேட்டியில், அமைச்சகம் இது தொடர்பான விசாரணையை ஏற்கனவே அறிவித்துவிட்டது. பெய்ரூட் வெடி விபத்து தொடர்பான சர்வதேச விசாரணைகளுக்கு உடன்பாடில்லை என்று தெரிவித்துள்ளார்.