இம்ப்ரோ சித்த மருந்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரை நீதிமன்றம் உத்தரவு

ஆய்வு செய்த அறிக்கை அளிக்க உத்தரவு... இம்ப்ரோ சித்த மருந்தில் கொரோனாவை தடுக்கும் திறன் உள்ளதா? என்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஆயுஷ் அமைச்சகத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்தவர் சித்த மருத்துவர் எஸ்.சுப்பிரமணியன். கொரோனா வைரசை கட்டுப்படுத்த 66 மூலிகைகள் உள்ளடங்கிய இம்ப்ரோ என்ற பொடியைத் தயாரித்தார். அந்த பொடியை நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சுப்பிரமணியன் மனு தாக்கல் செய்தார்.

நிதி ஒதுக்கீடு செய்து, மருந்துகளை ஆய்வுக்கு உட்படுத்தி செய்து அரசிதழில் வெளியிட்டு சாதாரண மனிதர்களுக்கும் பயன் சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் அவர் கோரியிருந்தார்.

அதை விசாரித்த நீதிமன்றம், மருந்தை ஆய்வு செய்ய மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை தமிழக அரசு அமைக்க உத்தரவிட்டது. இந்நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.

அதில், இம்ப்ரோ மருந்தில் கொரோனாவை தடுக்கும் திறன் உள்ளதா என்று ஆய்வு செய்ய வேண்டும். அந்த அறிக்கையை ஆகஸ்ட் 3ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆயுஷ் அமைச்சகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுப்பிரமணியன் தொடர்ந்த வழக்கையும் நீதிமன்றம் முடித்து வைத்தது.