மதுரையை 2-வது தலைநகரமாக அறிவிக்க வேண்டும்; பொன்.ராதாகிருஷ்ணன்

பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான பொன்.ராதாகிருஷ்ணன் மதுரையை 2-வது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி வருமாறு:-

தமிழகத்தில் 2-வது தலைநகரமாக மதுரையை அறிவிக்க வேண்டும். தமிழகத்துக்கு சென்னை தலைநகரமாக இருந்தாலும், தமிழுக்கு மதுரைதான் தலைநகரம். மதுரை, தமிழ் அன்னையின் பூமி, சங்கம் வளர்த்த தமிழ் கண்ட பூமி, அன்னை மீனாட்சியின் பூமி. மதுரையை 2-வது தலைநகரமாக கொண்டு வரவில்லை என்றால், தமிழ், தமிழரின் பழமையை ஏற்க மறுக்கிறோம் என்பது பொருளாகும்.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மதுரையில் பிரமாண்டமான முறையில் தமிழ் அன்னையின் சிலை அமைக்கப்படும் என்று கூறினார். எனவே அவரது பெயரால் ஆட்சி நடத்தும் அ.தி.மு.க. அரசு, தமிழின் தலைநகரமாக மதுரையை அறிவிக்க வேண்டும்.

அதோடு கூட மதுரையில் தமிழ் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும். மதுரை மற்றும் சுற்று வட்டார பகுதியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டுதான், அங்கு மத்திய அரசு சார்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது.

மேலும், விநாயகர் சதுர்த்தி விழா, பா.ஜனதாவின் விழா கிடையாது. இது இந்திய மக்களின் விழா. தேச ஒற்றுமைக்கான விழா. இதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும். தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்லில் பா.ஜனதா மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும். இதன் மூலம் பா.ஜனதா அங்கம் வகிக்கும் ஆட்சி அமையும். இவ்வாறு அவர் கூறினார்.