பழங்காலத்தில் தமிழர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு கடல்சார் வணிகம் உதவியது

தஞ்சாவூர்: பழங்காலத்தில் கடல்சார் வணிகம் மூலம் தமிழர்களின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது என்று இந்திய தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர் டி. தயாளன் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறையைச் சார்ந்த இந்தியப் பெருங்கடல் ஆய்வு மையம் சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்தியாவும், இந்தியப் பெருங்கடல் பாரம்பரியமும் என்கிற 3 நாள் கருத்தரங்கத் தொடக்க விழாவில் பங்கேற்று அவர் பேசியதாவது:

பழங்காலத்தில் கிழக்கு மற்றும் மேற்கத்திய நாடுகளுடன் தமிழ்நாடு நீண்ட காலமாக விரிவான கடல் வர்த்தக வலையமைப்பைக் கொண்டிருந்தது. அக்காலத்தில் பிற நாடுகளுடன் தமிழகம் மிகப் பெரும் கடல்சார் வர்த்தகம் மேற்கொண்டதற்கு ஆதாரமாக இத்தாலி, ஐரோப்பிய நாடுகள், சீனா, ஆப்பிரிக்கா, அரேபிய தீபகற்பம், இலங்கை, தென்கிழக்கு ஆசிய நாடுகள், தொலை கிழக்கு நாடுகளிலிருந்து கண்டறியப்பட்ட நாணயங்கள், வளையங்கள், கண்ணாடி பொருள்கள், மண்பாண்டங்கள் உள்ளிட்டவை உள்ளன.

தமிழ்நாட்டுடன் கடல்சார் வணிகத் தொடர்புடைய நாடுகளில் நம் நாட்டின் மண்பாண்டங்கள், கல்வெட்டுகள், மணிகள், சிலைகள் மற்றும் இதர பொருள்கள் காணப்படுகின்றன. இலங்கை, தாய்லாந்து, எகிப்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட முற்கால பானை ஓடுகளில் காணப்படும் தமிழ் பிராமி எழுத்துகள் மூலம் தமிழகத்தின் பழங்கால கடல்சார் நடவடிக்கைகளை அறிய முடிகிறது.

ஐநூற்றுவர், மணிக்கிராமம், நானாதேசி, அஞ்சுவண்ணம் உள்ளிட்ட தமிழகத்தின் வணிக சங்கங்கள், வணிகர்கள் கடல்சார் வணிகத்தில் மட்டுமல்லாமல் உள்நாட்டு வர்த்தகத்திலும் முக்கியப் பங்கு வகித்தனர். மேலும், வெளிநாடுகளில் சமய, மதச்சார்பற்ற அமைப்புகளை அமைப்பதிலும், ஆதரிப்பதிலும் ஈடுபட்டனர்.

தமிழ் மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கும், விரிவாக்கத்துக்கும் கடல்சார் வணிகம் முக்கியப் பங்கு வகித்தது. அது மட்டுமல்லாமல், பல்வேறு நாடுகளில் தமிழர்கள் காலனித்துவத்தையும் கொண்டிருந்தனர். மேலும், நமது கலை, பண்பாடு உள்ளிட்டவையும் அயல்நாடுகளுக்கு பரவியது. இவ்வாறு அவர் பேசினார்.


இந்தக் கருத்தரங்கத்தைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி. திருவள்ளுவன் தொடங்கி வைத்தார். பேராசிரியர்கள் ஒய். சுப்பராயலு, எஸ். ராஜவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறைத் தலைவர் வி. செல்வகுமார் வரவேற்றார். நிறைவாக, முனைவர் எஸ். கெüரிசங்கர் நன்றி கூறினார்.