மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலராக உயர்வு

உலகளவில் முன்னணி சமூக இணையத்தளமாக பேஸ்புக் உள்ளது. சமீபத்தில் பேஸ்புக்கின் பங்கு மதிப்பு 6.5 சதவீதம் உயர்ந்தது. இதன் காரணமாக அதன் உரிமையாளர்களில் ஒருவரும், 13 சதவீத பங்குகள் வைத்துள்ள மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பும் கணிசமாக உயர்ந்துள்ளதாக ப்ளும்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது, நடப்பு ஆண்டில் பேஸ்புக் பங்கு மதிப்பு கிட்டத்தட்ட 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனால் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் ரூ 1 லட்சத்து 65 ஆயிரம் கோடி கூடுதலாக சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகின் அதி பணக்காரர்களுக்கான கிளப்பில் அமேசானின் ஜெஃப் பெசோஸ் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் உள்ளனர். தற்போது இவர்களுக்கு அடுத்தபடியாக பிரபல சமூக வலைதளமான பேஸ்புக்கின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கும் இணைந்துள்ளார்.

அமெரிக்க டாலர் மதிப்பில் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்களை கடந்துள்ளது. தற்போது கொரோனா வைரஸ் ஊரடங்கினால் வீடுகளிலே முடங்கி கிடக்கும் மக்கள் பெரும்பாலும் சமூக வலைத்தளங்களில் பொழுதை கழிப்பதால், அவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.