சென்னையில் கொரோனாவுக்கு ஆண்கள் அதிகம் பாதிப்பு - மாநகராட்சி தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. மாநிலத்தில் அதிகளவு பாதிக்கப்பட்ட சென்னையிலும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 400-க்கும் கீழ் குறைந்துள்ளது. மேலும் இதனை முழுமையாக கட்டுப்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தநிலையில் சென்னையில் இதுவரை 40 முதல் 49 வயதினர் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அந்தவகையில் 40 முதல் 49 வயதினர் 18.10 சதவீதமும், 50 முதல் 59 வயதினர் 18.02 சதவீதமும், 30 முதல் 39 வயதினர் 17.89 சதவீதமும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் 20 முதல் 29 வயதினர் 15.71 சதவீதமும், 60 முதல் 69 வயதினர் 13.77 சதவீதமும், 70 முதல் 77 வயதினர் 7.45 சதவீதமும், 10 முதல் 19 வயதினர் 5.25 சதவீதமும், 80 வயதினருக்கு மேல் 2.65 சதவீதமும், 9 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 1.18 சதவீதமும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்டவர்களில் அதிகபட்சமாக ஆண்கள் 59.77 சதவீதத்தினரும், பெண்கள் 40.23 சதவீதத்தினரும் அடங்குவர். சென்னையில் மட்டும் இதுவரை 96 சதவீதம் பேர் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்துள்ளனர். மேலும் 1.79 சதவீத உயிரிழப்புகளும், தற்போது சிகிச்சையில் 2 சதவீதத்தினரும் உள்ளனர் என்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.