இன்று காலை முதல் மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கியது

சென்னையில் இன்று காலை முதல் மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கி உள்ளது. மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துத் தடை நீக்கப்பட்டதையடுத்து இன்று தமிழ்நாடு முழுவதும் பேருந்துகள் போக்குவரத்து சீரடைந்துள்ளது.

தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து தொடங்கி உள்ளது. ஊரடங்கு தளர்வுகளையடுத்து கடந்த ஒன்றாம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் பேருந்துகள் ஓடத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளுடன் மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்துக்கு இருந்த தடை நீக்கப்பட்டு மாவட்டம் தாண்டியும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் இன்று முதல் இயக்கப்படுகின்றன. நீண்ட தூரம் செல்லும் அரசுப் பேருந்துகளுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு முக்கிய பணி மற்றும் வியாபார நிமித்தமாக சென்று வர இ பாஸ் முறையும் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளது.

176 நாட்களுக்கு பிறகு மீண்டும் இன்று காலை 7 மணி முதல் 5 முதல் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. கொரோனா பரவலை தடுக்க பயணிகள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

ஒரு முறை ரெயிலில் அதிகபட்சமாக 400 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். தானியங்கி படிக்கட்டுகளிலும் லிப்ட்டிலும் சமூக இடைவெளியை பயணிகள் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. டோக்கன் முறை ரத்து செய்யப்பட்டு ஸ்மார்ட் கார்டைப் பயன்படுத்துமாறு பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.