நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை குறைந்து வருவதை தொடர்ந்து மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவு குறைந்துள்ளது.

நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 20 ஆயிரத்து 298 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று விநாடிக்கு 15 ஆயிரத்து 124 கன அடியாக சரிந்தது. இன்று நீர்வரத்து மேலும் குறைந்து விநாடிக்கு 14 ஆயிரத்து 610 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 800 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் தண்ணீரின் அளவை விட, திறப்பு குறைவாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 100.08 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 100.42 அடியாக உயர்ந்தது. இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 100.70 அடியாக அதிகரித்து உள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 100 அடியை தாண்டி நீடித்து வருவது விவசாயிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.