மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது...அணை நீர்மட்டம் 91.26 அடியாக நீடிப்பு!

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைய தொடங்கியுள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பரவலாக பெய்தது. இந்த மழையின் காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இந்த தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலுவை கடந்து தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக சேலம் மாவட்டம் மேட்டூர் அணையை வந்தடைகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்தது.

கடந்த 2-ந்தேதி அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 500 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து 4-ந்தேதி வினாடிக்கு 21 ஆயிரத்து 300 கனஅடியாக அதிகரித்தது. இந்த நிலையில் மழையின் அளவு குறைய தொடங்கியதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.

நேற்று முன்தினம் வினாடிக்கு 17 ஆயிரத்து 590 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 11 ஆயிரத்து 735 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 6 ஆயிரத்து 700 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 91.26 தற்போது அடியாக உள்ளது.