மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் 100 அடியை எட்டியது!

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக கடந்த ஜூன் மாதம் முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் பாசன தேவைக்கேற்றவாறு அதிகரித்தோ அல்லது குறைத்தோ திறந்து விடப்பட்டு வருகிறது. மேலும் மழைக்காலங்களில் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைக்கப்படும்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் ஏற்பட்ட நிகர் புயல் காரணமாக டெல்டா மாவட்டம் உள்பட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் தேவை மிகவும் குறைந்தது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 500 கனஅடியாகவும், கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 250 கனஅடியாகவும் குறைக்கப்பட்டது.

அணையில் இருந்து பாசனத்துக்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்ட நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. குறிப்பாக நேற்று அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரத்து 111 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

நீர்வரத்து அதிகரிப்பால் கடந்த 4 நாட்களாக மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து கொண்டே வந்தது. நேற்று மதியம் 100 அடியை அணை நீர்மட்டம் எட்டியது. இந்த ஆண்டில் 4-வது முறையாக மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.