மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் மின் கட்டணம் குறைவு ... அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: தமிழகத்தின் பொதுத்துறை அமைப்பான மின்சார வாரியம் கடந்த 8 ஆண்டுகளுக்கு பின் மின்சார கட்டண உயர்வை சமீபத்தில் வெளியிட்டது. அந்த அறிவிப்பின் படி, இந்த நடைமுறை கடந்த 2 நாட்களுக்கு முன் அமலுக்கு வந்தது. இந்த அறிவிப்பால் பல தரப்பினரும் அதிர்ச்சியில் உள்ளனர். இது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

அதில், தமிழக மின்வாரியம் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு லட்சத்து 59 ஆயிரம் கோடி கடன் சுமையில் இருந்து வந்தது. மேலும் ஆண்டுக்கு ரூ. 16,511 கோடி வட்டி செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது. இதை அடுத்து இந்த நிலையில் மத்திய அரசும் ஒன்றிய ஒழுங்குமுறை ஆணையமும் நிதி நிறுவனங்களும் தமிழக அரசுக்கு மின் கட்டணத்தை உயர்த்த நிர்ப்பந்தமும் பலமுறை கடிதங்கள் அனுப்பியது.

மேலும் தமிழகத்தில் 100 யூனிட்க்குள் மின்சாரத்தை பயன்படுத்துவோர் 1 கோடி பேர் உள்ளனர். அவர்களுக்கு எந்தவித மின் கட்டண உயர்வும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். 101 முதல் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்கள் 63 லட்சத்து 35 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு ஒரு மாதத்துக்கு 27 ரூபாய் 50 பைசா மட்டுமே கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இது ஒரு நாளைக்கு ஒரு ரூபாய்க்கும் குறைவான கட்டணமாகும்.

மேலும் அது மட்டும் இல்லாமல் குஜராத், கர்நாடகா போன்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகத்தில் இந்த மின் கட்டண உயர்வு மிகவும் குறைவு என்றும், அதனால் தான், புதிய தொழிற்சாலைகளை இங்கு துவங்க போட்டி போட்டு வருகிறார்கள். இந்த முறைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட கூடாது என மின்வாரியம் இந்த முடிவை எடுத்ததாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.