பல்வீர் சிங் மீதான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து உத்தரவு

சென்னை: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்... அம்பா சமுத்திரம் காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மீதான வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

அம்பாசமுத்திரம் உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்த பல்வீர் சிங், விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடிங்கியதாக புகார்கள் எழுந்த நிலையில் அவருக்கு எதிராக விசாரணை நடத்தக் கோரி கோரிக்கைகள் எழுந்தன.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு காவல் துறை அவர் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது. மேலும் ஐஏஎஸ் அதிகாரி அமுதா தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவும் பல்வீர் சிங்கிற்கு எதிரான புகார்களை விசாரித்து வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு புதன்கிழமை உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக காவல்துறை தலைமை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஐஏஎஸ் அதிகாரி அமுதா தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் இடைக்கால அறிக்கையின் பரிந்துரையின்படி இந்த வழக்கை குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.